சென்னை: 'கஜா' புயலால், 303 அரசு பள்ளிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.வங்க கடலில் உருவான கஜா புயல், டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்துள்ளது.
அரசு நிறுவனங்கள், தனியார் சொத்துகள் என, அனைத்துக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுஉள்ளது. பள்ளி கல்வி அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், 500 பள்ளிகள் சேதம் அடைந்தது தெரியவந்தது. அவற்றில் லேசான சேதமான பள்ளிகள், ஒரு வாரத்துக்கு முன் திறக்கப்பட்டன.தஞ்சையில், 11; திருவாரூரில், 28, புதுக்கோட்டையில், 89, நாகையில், 175 என, மொத்தம், 303 பள்ளிகள் அதிக சேதம் அடைந்துள்ளன. மோசமாக சேதம் அடைந்த, 303 பள்ளிகளை, கூடுதல் நிதி ஒதுக்கி சீரமைக்க, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.சேதமான பள்ளிகளை உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி கல்வி நிதி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி உள்ளிட்டவற்றின் கீழ், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவரை, 'நபார்ட்' திட்டத்தில் உள்ள கட்டடங்களில், வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.