தேவகோட்டை: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவங்கும் நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பள்ளி பூட்டை உடைத்து வினாத்தாளை சிலர் திருடி சென்றனர்.
அரையாண்டுத் தேர்வு டிச.,22 வரை நடக்கிறது. இதற்கான வினாத்தாள்கள் நேற்றுமுன்தினம் ஒருங்கிணைப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. தேவகோட்டையில் 26 பள்ளிக்குரிய வினாத்தாள் என்.எஸ்.எம்.வி.பி.எஸ்., பள்ளியில் வைக்கப்பட்டன. நேற்று காலை பணியாளர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல்தாள், பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், பிளஸ் 1 ஆங்கிலம், பிளஸ் 2 தமிழ், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், கணினிஅறிவியல், வணிகவியல் வினாத்தாள்கள் திருடப்பட்டிருந்தன. தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் புகாரில் ஜெயச்சந்திரன் எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., ஜாகிராம், டி.எஸ்.பி., கார்த்தி கேயன், மாவட்ட கல்வி அலுவலர் சாமிசத்திய மூர்த்தி விசாரித்தனர். கடந்த மாதம் இரண்டாம் பருவத்தேர்வு வினாத்தாள்களும் தேவகோட்டையில் வெளியாகின. 'உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.