சென்னை: ''தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - இன்பசேகரன்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, குத்தலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: அரசு நிர்ணயித்துள்ள நிபந்தனைகளை, பூர்த்தி செய்யாததால், அந்தப் பள்ளியை, தரம் உயர்த்த வாய்ப்பில்லை.இன்பசேகரன்: தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கியுள்ளது. எட்டு ஆண்டுகளாக, அம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தும், கல்வியில் முன்னேற்றம் இல்லை. எனவே, அரசு நிபந்தனைகளை தளர்த்தி, பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டை யன்: உங்கள் தொகுதியில், இந்த ஆண்டு, ஒரு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், ஐந்து பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நீங்கள் கேட்ட பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.இன்பசேகரன்: முன்மொழிவுகள் அனுப்பிய பள்ளிகள் அனைத்தும், தரம் உயர்த்தப்படுமா, என்பதை தெரிவிக்க வேண்டும். பென்னாகரம் தொகுதியில், 146 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. ஐந்து பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. சிறப்பு கவனம் செலுத்தி, காலியிடங்களை நிரப்ப வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பல ஆசிரியைகள், மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, மதுரை உயர் நீதிமன்றம் கிளை தடை விதித்துள்ளது. தடையை நீக்கிய பின், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - கிரி: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், பெரம்பாக்கம் கிராமத்தில், நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கான விதிமுறைகள் அனைத்தும் பூர்த்தியாகி உள்ளன.அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆண்டு பரிசீலிக்கப்படும்.முஸ்லிம் லீக் - அபூபக்கர்: கடையநல்லுார் தொகுதி, சுந்தரேசபுரம் பள்ளி கட்டடம், மிகவும் பழுதடைந்துள்ளது; அதை சீரமைக்க வேண்டும். கிராம பள்ளிகளை, தரம் உயர்த்த வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.