நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில தொழிற்சங்கங்கள், நாடு முழுவதும்நடத்திய வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகத்தில், பெரிய பாதிப்பு இல்லை. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.
10 கோரிக்கைகள்'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்' உள்ளிட்ட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை, நேற்று துவக்கின.இதில், ரிசர்வ் வங்கி, காப்பீடு, அஞ்சல், வருமான வரி, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி துறை உள்ளிட்ட, பல துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.இதேபோன்று, மாநில அளவில், வருவாய், வணிக வரி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட, பல துறைகளை சேர்ந்த அரசுஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.இந்த போராட்டம், தமிழகத்தில், பெரிய அளவில் எதிரொலிக்கவில்லை. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், தற்காலிக பணியாளர்கள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உதவியுடன், 90 சதவீதபஸ்கள் இயக்கப்பட்டன.சில பணிமனைகளில், தினக்கூலி அடிப்படையில், புதிதாக, டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆட்களும் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம், பாதுகாப்பு கருதி, அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு, பஸ்கள் இயக்கப்படவில்லை.நாடு முழுவதும் நடந்த போராட்டம் காரணமாக, சில மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இருந்தாலும், தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில், எந்த பாதிப்பும் இல்லை.தமிழகத்தில், பாரத ஸ்டேட் வங்கியை தவிர, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இதர பொது துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அதிகாரிகள் சங்கம், இதில் பங்கேற்கவில்லை. இதனால், வங்கி வாடிக்கையாளர் சேவையில், 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது.இன்றும், 'ஸ்டிரைக்'இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர், சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:தமிழகத்தில், 40 ஆயிரம் வங்கி ஊழியர்களும், நாடு முழுவதும், நான்கு லட்சம் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், 20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை முடங்கியது. இன்றும், வேலை நிறுத்தம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.