Image result for ELECTION
சென்னை: தமிழகத்தில், காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த, 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தகுதி நீக்கம் செய்தது செல்லும்' என, தீர்ப்பளித்தது. இதனால், 18 தொகுதிகள் காலியாக உள்ளன.இதுதவிர, எம்.எல்.ஏ.,க்கள் மறைவால், திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன.குற்றவியல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதால், ஓசூர் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணரெட்டியும் பதவி இழந்தார். எனினும், அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக, இன்னும் அறிவிக்கப் படவில்லை.தற்போதைய நிலவரப்படி, 20 தொகுதிகள் காலியாக உள்ளன. திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலை புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால், ஒத்தி வைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.திருப்பரங்குன்றம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றியை எதிர்த்து, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சரவணன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அடுத்த மாதம், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அப்போது, காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை, லோக்சபா தேர்தலுக்கு பின் நடத்தும்படி, அ.தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அதனால், 'காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளுக்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தலை நடத்த வேண்டும்' என, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தன.இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:இடைத்தேர்தல் தொடர்பாக, நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 'ஏப்ரலுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என, தேர்தல் கமிஷன் உறுதியளித்துள்ளது.எனவே, லோக்சபா தேர்தலுடன், காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு அதிகம். வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும், தேர்தல் நடக்காமலிருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.