தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரசர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை பயோமெட்ரிக் முறையின் மூலம் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு தொடர்ந்து அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி கம்ப்யூட்டரில் பாடத்திட்டங்களை பதிவு செய்து அதை புரஜக்டர் உதவியுடன் திரையில் போட்டு காட்டப்படும்.


அதேபோல் திருக்குறள், ஆத்திச்சூடியை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடலாகவே பாடி காட்டப்படும். இதனால் மாணவர்களின் உள்வாங்கும் திறன் அதிகரிப்பதுடன் எளிதாக புரிந்து கொள்ளவும் முடிகிறது. இதன்படி மாவட்டத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சத்திரம் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் அரசர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. நேற்று நடந்த ஸ்மார்ட் வகுப்பை தஞ்சை ஆர்டிஓ சுரேஷ் துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் சாந்தா, மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தஞ்சை  கலெக்டரின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பள்ளியில் மாவட்டத்திலேயே முதல்முறையாக ஸ்மார்ட் வகுப்பு தொடங்கி துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் குமார் கூறியதாவது: கலெக்டர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசர் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்தது தான் இந்த அரசர் தொடக்கப்பள்ளி. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்கீழ் ஒரு கம்ப்யூட்டர், 2 லேப்டாப், புரஜக்டர் உதவியுடன் 155 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க முடியும். ஸ்மார்ட் வகுப்பில் எடுக்கப்பட்ட பாடத்தை உடனே பதிவு செய்து கல்வி பூஞ்சோலை என்ற ஆப்பில் பதிவு செய்யப்படும். இந்த பாடத்தை பெற்றோர்கள் தெரிந்து கொண்டு வீட்டுக்கு சென்றவுடன் தங்களது குழந்தைகளுக்கு நடத்துவதற்கு வசதியாக யூடியூப் மூலம் வெளியிடப்படும். இதனால் ஒரு மாணவன் பள்ளியிலும், வீட்டிலும் தனது பாடத்தை எளிதாக கற்று கொள்ள முடிகிறது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மேன்மை அடைகிறது என்றார்.