சென்னை:அனைத்து பள்ளிகளிலும், 'எமிஸ்' எண்ணுடன் கூடிய, டிஜிட்டல் மாற்று சான்றிதழ் வழங்க, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்து, பள்ளியை விட்டு செல்லும் மாணவர்களுக்கு, காகிதத்தில் எழுதப்பட்ட மாற்று சான்றிதழ் வழங்கப்படும். 

இந்த மாற்று சான்றிதழை, நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது கடினம். இந்த நிலையை போக்க, பள்ளிகளில் டிஜிட்டல் சான்றிதழ்கள், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டன. சில பள்ளிகளில், சோதனை முறையில் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த ஆண்டில் இருந்து அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் எமிஸ் என்ற கல்வி மேலாண்மை இணையதள குறியீட்டு எண்ணுடன் கூடிய, இந்த சான்றிதழை அனைத்து பள்ளிகளும் ஒரே நேரத்தில் கையாளமுடியும்.ஒவ்வொரு பள்ளி யும், வேறு பள்ளி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றால், அந்த மாணவர்களின் எமிஸ் எண் மட்டும் இருந்தால், பள்ளி கல்வியின் ஆன்லைன்தகவல் தொகுப்பில் இருந்து, டிஜிட்டல் மாற்று சான்றிதழ்களை எளிதாக எடுத்து கொள்ள முடியும் என, அதிகாரிகள்தெரிவித்தனர்.