Image result for neet

"நீட்' தேர்வு எழுத அமைக்கப்பட்ட 10 மையங்களிலும் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்று தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
புதுச்சேரி, பிச்சவீரன்பேட் கிரிஸ்ட் பொறியியல் கல்லூரி, முத்தியால்பேட்டை வாசவி இன்டர்நேஷனல் பள்ளி உள்பட 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி 5 மணி வரை தேர்வு நடைபெற்றது.
தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறையின் மூலம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த தகவல்படி, புதுச்சேரியில் உள்ள 10 மையங்களில் 6,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதாகத் தெரிகிறது. தேர்வுக்காக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன், காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்து விட்டனர்.
கடந்த முறை போலவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் வியர்வையைத் துடைத்துக் கொள்ள கைக்குட்டை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுத்துவிட்டதாகவும், காத்திருக்கும் நபர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.