Top news

தமிழக அரசு கேபிள், 'டிவி'யில், டி.டி.எச்., - 'டைரக்ட் டு ஹோம்' என்ற, வீடுகளுக்கான நேரடி சேவையை துவக்க, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாக, கேபிள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அரசு கேபிள், 'டிவி'யில் விரைவில், டி.டி.எச்., 


அரசு கேபிள், 'டிவி'க்கு, 36 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு சேவை வழங்க, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஆப்பரேட்டர்கள் செயல்படுகின்றனர். அரசு கேபிள், 'டிவி'யில், விரும்பிய

சேனல்களை மட்டும், கட்டணம் செலுத்தி பார்க்கும் முறை, பிப்ரவரியில் அறிமுகமானது. இந்நிலையில், அரசு கேபிள் ஒளிபரப்பில், டி.டி.எச்., சேவையை துவக்க, பரிந்துரைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: அரசு கேபிள் ஆப்பரேட்டர்கள், தனியார் கேபிள், 'டிவி' நிறுவனங்களுக்கு இணையாக, கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க, கோரிக்கை வைக்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்குவதில்லை என்றும், புகார்கள் வருகின்றன. இதனால், அரசு கேபிள், 'டிவி' ஒளிபரப்பில், வீடுகளுக்கு நேரடி இணைப்பு வழங்கும், டி.டி.எச்., சேவையை துவக்கலாம் என்ற திட்டம் இருக்கிறது. அப்போது, கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு, கமிஷன் தொகை வழங்க வேண்டி இருக்காது.


இதனால், குறைந்த கட்டணத்தில், சேவை வழங்க முடியும். அரசு கேபிள், 'டிவி' துவக்கப்பட்டதன் நோக்கமே, குறைந்த கட்டணத்தில், கேபிள் சேவை வழங்குவது தான். எனவே, டி.டி.எச்., சேவை துவக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.