பள்ளிகள் திறந்து ஒரு மாதமான நிலையில், இலவச சீருடைகளை முழுமையாக வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, எட்டாம் வகுப்பு வரை இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில், ஒன்று முதல் ஐந்து வரை, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டது.
ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான, புதிய சீருடைகளின் நிறம் மங்கலாக இருந்தது. அதனால், நிகழாண்டில் மீண்டும் ஐந்தாம் வகுப்பு வரையிலும் சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், சீருடையின் நிறம் மாற்றப் 
பட்டுள்ளது. இதையடுத்து, இந்தக் கல்வியாண்டில், பள்ளி திறந்ததும், நிறம் மாற்றப்பட்ட, புதிய சீருடைகள் சில பள்ளிகளில் மட்டும் வழங்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில், புதிய சீருடைகள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பழைய உடைகளையே அணிந்து வந்தனர்.
இந்த நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், சீருடை வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மாவட்ட வாரியாக இந்தப் பணிகளை கண்காணித்து சீருடை விநியோகத்தை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.