சென்னை: மக்களிடம் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழகம் முழுவதும், 'தேர்தல் கல்விக்குழு' அமைக்கும் பணியில், தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுவரை, 26 ஆயிரத்து, 732 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

நாடு முழுவதும், தேர்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 'தேர்தல் கல்விக்குழு' அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 
பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள், ஓட்டுச்சாவடிகள் என, நான்கு பகுதிகளாக, குழுக்களை அமைக்க வேண்டும்.
பள்ளிகள் அளவில் அமைக்கப்படும் குழுக்களில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, மாணவ - மாணவியரை உறுப்பினர்களாக சேர்க்கலாம்.  ஒவ்வொரு குழுவிலும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் கன்வீனர்கள் நியமிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர்களாக, ஆசிரியர்கள் குழு செயல்பட வேண்டும். பல்கலைகள், கல்லுாரிகளில், அனைத்து மாணவ - மாணவியரும் குழுவில் இடம் பெறலாம். ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.  குழுவில் கட்சி சாராதவர்கள், யார் வேண்டுமானாலும் உறுப்பினராக சேரலாம் என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.இவ்வாறு அமைக்கப்படும் குழுக்களுக்கு, தேர்தல் நடைமுறை குறித்து, பயிற்சி அளிக்கப்படும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, எந்த மாதிரியான விண்ணப்பங்களை பயன்படுத்த வேண்டும் என, பயிற்சி அளிக்கப்படும்.குழுக்கள் அமைப்பதற்காக, தமிழகத்தில், மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் கமிட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாநிலம் முழுவதும் இதுவரை, 3,941 பள்ளிகள், 1,098 கல்லுாரி மற்றும் பல்கலைகள், 21 ஆயிரத்து, 693 ஓட்டுச் சாவடிகள் ஆகியவற்றில், தேர்தல் கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.பள்ளி பாடத் திட்டத் தில், 'தேர்தல் நடைமுறை'யை ஒரு பாடமாக கொண்டு வர, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக, இக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும், அதிக அளவில், தேர்தல் கல்விக் குழுக்களை ஏற்படுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.