ஸ்பீடு நிறுவன இலவச, 'நீட்' பயிற்சியில் 1,291 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி

சென்னை:'ஸ்பீடு' நிறுவனத்தின் இலவச, 'நீட்' பயிற்சியில், 1,291 அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேரடி களப்பயிற்சி, மாதிரி தேர்வு, மொபைல் ஆப் என, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை தொடர உள்ளதாக, அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஸ்பீடு இன்ஸ்டிடியூட் நிறுவனம் சார்பில், இலவசமாக, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஸ்பீடு நிறுவனத்தின் இலவச பயிற்சி பெற்ற, அரசு மற்றும் அரசு உதவி பள்ளி மாணவர்கள், 1,291 பேர், மே மாதம் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இது குறித்து, ஸ்பீடு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஸ்பீடு நிறுவனம், 2002ல் துவங்கப்பட்டு, அனைத்து வகை மருத்துவ போட்டி தேர்வுகளுக்கும், பயிற்சி அளித்து வருகிறது. இதுவரை, 1.25 லட்சம் மருத்துவ மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி அளித்துள்ளோம். தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, 100 பள்ளிகளில் இலவசமாக, நீட் தேர்வு பயிற்சியை வழங்க, தமிழக அரசுடன், ஸ்பீடு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
மாநிலம் முழுவதும், 412 பள்ளிகளில், செயற்கைக்கோள் பயிற்சி மையங்கள் அமைத்து, இலவசமாக, நீட் தேர்வு பயிற்சி அளித்து வருகிறோம். இதற்காக, மாணவர்களிடம் எந்த கட்டணமும் பெறவில்லை; அரசிடமும் எந்த நிதியும் பெறாமல், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட்' கணினி வகுப்புகள் அமைத்து, திறமையான டாக்டர்கள் மற்றும் பாட வல்லுனர்களை வைத்து, நேரடி சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.
உண்டு, உறைவிட பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என, ஒரே நேரத்தில், இரண்டு மொழிகளில் பயிற்சி தருகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும், அவர்களுக்கு அரசு வழங்கிய, இலவச, 'லேப்டாப்'பில், நீட் பயிற்சிக்கான, சிறப்பு புத்தகத்தை, டிஜிட்டல் வடிவில் கொடுத்துள்ளோம்.நீட் மாதிரி தேர்வுக்கான, 'மொபைல் ஆப்' தயார் செய்து, அதில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாக்களை இணைத்து, மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்தவாறே, மாதிரி தேர்வில் பங்கேற்க, பயிற்சி அளித்துள்ளோம். 
நீட் தேர்வின் முக்கிய அம்சமான, எம்.சி.க்யூ., என்ற, பல்வகை விடைக் குறிப்புகளுடன் கூடிய, வினா வங்கி தயார் செய்து, மாணவர்களுக்கு தினமும் தேர்வு நடத்துகிறோம். இந்த தேர்ச்சி அளவும், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணும், வரும் ஆண்டுகளில் இன்னும் உயரும்.இவ்வாறு ஸ்பீடு பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment