பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் வியாழக்கிழமை முதல் ஆன் -லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்வுகள் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: 
கடந்த மார்ச் -ஏப்ரல் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஜூலை 5 -ஆம் தேதி முதல் ஜூலை 14 -ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசித் தேதியாகும். 
தேர்வுக் கட்டணம்: இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 50, இதர கட்டணம் ரூ. 35 ஆகியவற்றுடன் ஆன் -லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 சேர்த்து பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்வு கால அட்டவணை: ஜூலை 5 - மொழிப் பாடம் தாள்-1, ஜூலை 6 - மொழிப் பாடம் தாள்-2, ஜூலை 7 - ஆங்கிலம் தாள்-1, ஜூலை 9- ஆங்கிலம் தாள்-2, ஜூலை 10 - வேதியியல், கணக்குப் பதிவியல், தொழில்பிரிவு கணக்குப் பதிவியல் தியரி, புவியியல், ஜூலை 11 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, செவிலியர் (தொழில்), செவிலியர் (பொது), ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் செயல்பாடுகள், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு.
ஜூலை 12 - தகவல்தொடர்பு ஆங்கிலம், நன்னெறி, கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு மொழிப் பாடம் (தமிழ்), மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல்
ஜூலை 13 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம், பொது இயந்திர தத்துவம்-1, மின் இயந்திரம் மற்றும் உபகரண தத்துவம்-1, மேலாண்மைத் தத்துவங்கள், மேலாண்மை தத்துவம் மற்றும் நுட்பங்கள் 
ஜூலை 14 - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திர தத்துவம் -2, மின் இயந்திரம் மற்றும் உபகரண தத்துவம் -2, மின்னணுவியல் உபகரணங்கள், சிவில் வரைபட நிபுணர், ஆட்டோ மெக்கானிக், ஜவுளி தொழில்நுட்பம்.