உபரி ஆசிரியர்கள் உள்ளதால் ஆசிரியர் மாறுதல் கவுன்சலிங் 8 மாவட்டங்களில் நடத்த தடை : தொடக்க கல்வி துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 8 மாவட்டங்களில் உபரி ஆசிரியர்கள் உள்ளதால் அந்த மாவட்டங்களில் மாறுதல் கவுன்சலிங் நடத்த தொடக்க கல்வித்துறை தடை விதித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 13ம் தேதி முதல் நடக்கிறது.


இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியிடங்களை கணக்கிடுவதில் கல்வி அதிகாரிகள் எடுத்த புள்ளி விவரங்கள் தவறாக இருந்ததால், கவுன்சலிங் விடிய விடிய நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அதனால் ஆசிரியர்கள் -கல்வி அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அனைத்து மாவட்டத்திலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, தற்போது 8 மாவட்டங்களில் கவுன்சலிங் நடத்த வேண்டாம் என்று தொடக்க கல்வித்துறை தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: 

மாவட்டங்கள் ஒருசிலவற்றில் காலிப்பணியிடங்கள் மிக அதிகமாகவும், ஒருசிலவற்றில் மிகக்குறைவாகவும் இருக்கிறது. காலிப்பணியிடம் அதிகமாக உள்ள மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி விதிகளுக்கு உட்பட்டு அந்த மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்துக்கு மாறுதல் வழங்குவதை தவிர்க்க வேண்டும். 


  
மேலும் அரசாணை 403ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அனைத்து மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள மொத்த காலிப் பணியிடங்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடம் அதிகமாக உள்ளன. 

எனவே, இந்த மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கிடையாது. அதேபோல, மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டம் விட்டு மாவட்டம் கிடையாது. ஆனால் மேற்கண்ட 8 மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மற்ற மாவட்டத்தில் இருந்து மாறுதல் வழங்கலாம். அதிலும் மனமொத்த மாறுதல் கேட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உத்தரவு வழங்கப்படும். இவ்வாறு இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, 8 மாவட்டங்களில் நேற்று மாறுதல் கவுன்சலிங் நிறுத்தப்பட்டது. 

No comments:

Post a Comment