சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.
அரசு மற்றும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 3,355; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 517 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,095; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 690 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 5,657 மருத்துவ இடங்களுக்கு, 43 ஆயிரத்து, 935 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான தரவரிசை பட்டியல், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், இன்று காலை, 9:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தர வரிசை பட்டியலை வெளியிடுகிறார். முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 5ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் கூறுகையில், ''மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியிட, உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதிக்கவில்லை. திட்டமிட்டபடி, இன்று தரவரிசை பட்டியல்

வெளியிடப்படும்,'' என்றார்.