பிளஸ்1 வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 கடந்த ஆண்டு முதல் பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. மாதாந்திரப் பாடத் திட்டம், புதிய மாதிரி வினாத் தாள் ஆகியவை தாமதமாக வெளியிடப்பட்டதால், பிளஸ்1 அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் சிலர் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது. இவர்களுக்கென தனிப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் ஜுன் மாதம் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனால், பலரும் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.
 இந்த நிலையில், பிளஸ்1 தோல்வியுற்ற மாணவர்கள் பிளஸ்2 வகுப்பில் தொடர்ந்து பயின்று வருகின்றனர். இவர்கள் வருகிற மார்ச் மாதம் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகளை ஒரே நேரத்தில் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தேர்வெழுதும் மாணவர்கள் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்று, பிளஸ்1 தேர்வில் தோல்வியடைந்தால் மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.
 பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், பிளஸ்1 வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுதேர்வுகள் நடத்தப்படாத நிலையில், இனி வரும் காலங்களில் செப்டம்பர் மாதத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
 எனவே, பிளஸ்1 தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் தோல்வியுற்ற பாடங்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்