புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், டிசம்பர் முதல் வாரத்திற்குள், மாணவர்களுக்கு புத்தகம், நோட்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவான கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


மக்களுக்கு நிவாரணம் வழங்க, தமிழக அரசின் பல்வேறு துறைகள் முயற்சி மேற்கொண்டு உள்ளன.பள்ளி கல்வித் துறை சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், அலுவலகங்களை சீர்படுத்தும் பணி துவங்கியுள்ளது.நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளனர்.

இந்நிலையில், புயலால் வீடுகள் சேதமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்துள்ளனர். இதில், பள்ளி மாணவ - மாணவியரும், புத்தக பை, நோட்டு, புத்தகம் ஆகியவற்றை இழந்துள்ளனர். எனவே, புத்தகம், நோட்டுகளை இழந்தவர்களுக்கு, அரசின் சார்பில், மீண்டும் இலவச நோட்டு, புத்தகம் வழங்க, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.இந்த பணிகளை, டிசம்பர் முதல் வாரத்திற்குள், அதாவது இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பள்ளிகளை ஒரு வாரத்திற்குள் திறப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.