திண்டுக்கல்,:'கஜா' புயல் பாதித்த மாவட்டங்களில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க போதிய வசதிகளை செய்து கொடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு 2019 மே 5ல் நடக்கிறது. இத்தேர்வுக்கு பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்கள் யாரும் விடுபடாமல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதில், 'விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை கண்டறிந்து தேவையான வசதிகளை ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்து கொடுக்க வேண்டும். போதிய இணைய வசதியை பெற முடியாத மாணவர்கள் மற்றும் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி, 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.