Image result for deepavali


'தீப ஒளியே தீபாவளி,' என்பர். ''தீப ஒளி இருளை அகற்றி வெளிச்சத்தைத் தருவதைப் போல் நம்மிடையே உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி மனதில் ஞான ஒளியை ஏற்றுவதன் மூலம் விரட்டியடிக்க வேண்டும். தீப ஒளி பிறருக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டுவது போல் நாமும் பிறருக்குப் பயன்பட வேண்டும்,'' என்பதை தீபாவளி உணர்த்துகின்றது. பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து உபசரித்து மகிழ்ச்சியாக இருப்பது போல் எப்போதும் சந்தோஷமாக மனதை வைத்து கொள்ளப் பழகிக் கொண்டால் வாழ்வில் நிம்மதி ஏற்படும் என்பதையும் தீபாவளி உணர்த்துகிறது.தீபாவளி வரக்காரணம்தீபாவளி கொண்டாடுவதற்கு ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ராவணனைக் கொன்ற ராமர் வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி என்பர் சிலர். பகவான் விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமண நாளை சிலர் தீபாவளி என்கின்றனர். சில இடங்களில் குருநானக் பிறந்த தினத்தையும் மற்றும் சில இடங்களில் ஆதிசங்கரர் ஞான பீடத்தை நிறுவிய தினத்தையும், வேறு சில இடங்களில் சந்திரகுப்த விக்கிரமாதித்தன் அரியணை ஏறிய தினத்தையும் கொண்டாடுகின்றனர். எத்தனை காரணங்கள் இருந்தாலும் நரகாசுரனை கிருஷ்ண பகவான் வதம் செய்த நாளே தீபாவளி என்பது தான் பொதுவானது.நரகாசுரனும், தீபாவளியும்கிருஷ்ணருக்கும், பூமாதேவிக்கும் மகனாக பிறந்தவன் தான் நரகாசுரன். அவனுடைய உண்மையான பெயர் 'பவுமன்'. இவன் கடும் தவமிருந்து நிறைய வரங்கள் பெற்றவன். தாயைத் தவிர யாராலும் தன்னை கொல்ல முடியாது, என வரம் பெற்றவன். பின்னாளில் அசுர குணங்கள் வாய்க்கப்பெற்று மனிதர்களையும், தேவர்களையும் துன்புறுத்தி அட்டூழியம் செய்ததால் 'நரகாசுரன்' (மனிதனுக்கு எதிராக செயல்படுபவனை 'நரகர்' என்பர்) என அழைக்கப்பட்டான். அவனை அழிக்க கிருஷ்ணர் சென்ற ரதத்தை பூமாதேவியின் சக்தியான சத்தியபாமா ஓட்டி சென்றாள். தாயால் தான் மரணம் ஏற்படும், என நரகாசுரன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வரவே ரதத்தில் மயங்கி விழுவது போல் நடித்து சத்தியபாமாவை கொண்டு அவனை வதம் செய்தார் கிருஷ்ண பகவான். அரக்கன் நரகாசுரனும், அவன் தாய் பூமாதேவியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவன் இறந்த நாளை புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி சந்தோஷமாகக் கொண்டாடினர். அதுவே தீபாவளி பண்டிகையானது.தீபாவளியின் தத்துவம்தந்தை நரகாசுரன் இறந்த நாளை முதல் முதலில் கொண்டாடியவர் மகன் பகதத்தன் தான். கிருஷ்ணருக்கும், நரகாசுரனுக்கும் நடந்த யுத்தம் பகலில் துவங்கி நள்ளிரவில் முடிந்தது. நரகாசுரனின் வதம் சூரியன் உதயமாவதற்கு சில நாழிகைக்கு முன்னால் நடந்தது. எனவே தான் சூரியன் உதயமாவதற்கு முன் கங்க ஸ்நானம் செய்து, பட்டாசு வெடித்தார்கள். தீபாவளி கூறும் தத்துவம், 'எத்தனை வரங்கள் பெற்று பலசாலியாக இருந்தாலும், அராஜக வழியில் சென்றால் பெற்ற மகனாக இருந்தாலும் தண்டனை கிடைக்கும்' என்பதே.அகிலம் போற்றும் தீபாவளிமராத்தியர் தீபாவளியை 'தாம்பூலம் போடும்' திருவிழா எனவும், ராஜஸ்தான் 'தீபாவளி ஆண்டு' எனவும், சீக்கியர் 'விடுதலை தினம்' எனவும், மகாராஷ்டிராவில் 'நாட்டிய திருவிழா' எனவும், நேபாளத்தில் 'திகார்' என பெயிரிட்டும் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். கைலாயப் பர்வதத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடியதை நினைவில் கொண்டு தீபாவளியன்று இரவு முழுவதும் குஜராத்தி மக்கள் சொக்கட்டான் ஆடுகின்றனர். மலேசியாவில் 'ஹரி தீபாவளி' எனவும், ஒடியாவில் தீபாவளிக்கு முந்தைய நாளே 'எம தீபாவளி' என்றும், பீகாரில் கண்ணன் கோவர்த்தன் மலையைக் குடையாகப் பிடித்த நாளையும், மத்திய பிரதேசத்தில் மகா விஷ்ணு பூமிக்கு வந்த நாளையும் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஸ்வீடன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகின்றது.கென்யா நாட்டில் தீபாவளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தீபாவளிக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது. ஆஸ்திரேலியா காலண்டரில் தீபாவளி நாளை குறித்துள்ளது. 1962 ல் வந்த 'திகம்பரச்சாமியார்' என்ற படத்தில் வரும் 'ஊசிப் பட்டாசே... வேடிக்கையா நீ' என்ற பாடல் தான் தீபாவளி பற்றிய முதல் சினிமா பாடலாகும்.திருச்சி ரங்கநாதர் கோயிலில் தீபாவளியன்று, அவரை ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டு வந்து எண்ணெய்க் காப்பிட்டு சந்தனம், மஞ்சனம் நடக்கும். அதன் பிறகு பக்தர்களுக்கு எண்ணெய் மற்றும் சீயக்காய்த் துாளை பிரசாதமாக வழங்குவர். தீபாவளியன்று குபேரன், சிவனை வழிபட்டு பொக்கிஷம் பெற்றதால் பட்சணம் வைத்து 'குபேர பூஜை' செய்கின்றனர். தீபாவளியை கொண்டாடுவோம்; விருந்தோம்பலை விரும்பி ஏற்போம்; ஆதரவற்றோர் இல்லங்கள் சென்று உதவி மகிழ்வோம்.- இரா.ரெங்கசாமி,எழுத்தாளர்வடுகபட்டி