அவசியம் இல்லாமல், பணி நேரத்தில் போராட்டங்களில் ஈடுபடும் ஊழியர்களின், சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில், கள பிரிவில் பணிபுரியும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகள் சாராத சங்கங்களில், உறுப்பினர்களாக உள்ளனர். ஊதிய உயர்வு, போனஸ் உட்பட, ஊழியர்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக, மின் வாரியம், 17 தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்துகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:காலி பணியிடங்களை நிரப்புதல், உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட, நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகள், உயரதிகாரிகளை சந்தித்து கடிதம் வழங்குவர். அதன் மீது, உரிய தீர்வு காணப்படும்.இதனால், சங்க நிர்வாகிகளும், அவசியம் இல்லாமல், போராட்டத்தை நடத்த மாட்டார்கள். 
சில சங்கங்களின், மாநில, மாவட்ட பொறுப்புகளில் இருக்கும் சிலர், அலுவலகம் வந்து வருகை பதிவு செய்து விட்டு, சொந்த வேலைக்காக சென்று விடுகின்றனர். அதே சமயம், அவர்களின் சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஊழியர்கள், வேலைகளை ஒழுங்காக செய்கின்றனர்.மழை காலம் என்பதால், பணிக்கு தாமதமாக வருவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பிரிவு அலுவலக பொறியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, அவர்கள் நடவடிக்கை எடுத்தால், சிலர், 'அதிகாரி லஞ்சம் வாங்குகிறார்' என்ற, தவறான தகவல்களை பரப்பி, போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.இதற்கு, ஊழியர்களிடம் ஆதரவு இல்லை என்றாலும், அவர்களை கட்டாயப்படுத்தி, போராட்டங்களில் பங்கேற்க செய்வதாக புகார்கள் வருகின்றன. தவறு செய்வோர் மீது, உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
அதை விடுத்து, சங்க செயலர்களுக்கு தெரியாமல், பொய்யான காரணங்களை கூறி, வருகை பதிவு செய்து விட்டு, போராட்டங்களில் ஈடுபடும் நபர்களை, பணிக்கு வராதவர்களாக கருதி, சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு, பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.