கஜா புயலுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினரின் ஒருநாள் ஊதியம் வழங்கப்படும் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் கடலூரில் புதன்கிழமை கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: கஜா புயல் நிவாரண நிதிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம், அதன் 15 இணைப்புச் சங்கங்கள், சகோதர சங்கங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேர் தங்களது ஒருநாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முன் பணமாக வழங்க வேண்டும்.
தமிழத்தில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள சுமார் 2.50 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வருகிற டிசம்பர் 2- ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 6 -ஆவது மாநில மாநாடு கடலூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பு ஒன்றானதை வரவேற்கிறோம் என்றார் அவர்