சென்னை, 'பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது' என, அதன் மாநில தலைவர், சண்முகராஜன் தெரிவித்தார்.
அரசு அலுவலர் ஒன்றியம், அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து, தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.பின், சண்முகராஜன் அளித்த பேட்டி:பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, அரசே ஏற்று நடத்த வேண்டும். 
சத்துணவு பணியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், ஊராட்சி செயலர்களுக்கு, வரையறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உட்பட, 20 கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.பேச்சு சுமுகமாக நடந்தது. முதல்வரிடம் எடுத்துச் சென்று, விரைவில் நிறைவேற்றி தருவதாக, அமைச்சர் உறுதி அளித்தார். அதன் அடிப்படையில், பல்வேறு சங்கங்கள், டிச., 4ல் அறிவித்துள்ள, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், நாங்கள் பங்கேற்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.