புதுக்கோட்டை, ''கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது,
'' என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் சீரமைப்பு பணி களை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

அதன் பின், அவர் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில், 66 சதவீதம் மின் வினியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 6.15 லட் சம் மின் இணைப்புகளில், நான்கு லட்சத்துக்கும் மேலான இணைப்புகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த, 660 கி.மீ., நீளமுள்ள வயர்களில், 477 கி.மீ., சரி செய்யப்பட்டுள்ளது. 5,209 ட்ரான்ஸ்பார்மர்கள் சார்ஜ் செய்யப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்ட, 5,400 மின் வாரிய ஊழியர்களில், ஆந்திராவைச் சேர்ந்த, 300 பேர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.

கடந்த, 14 நாட்களாக மின் சீரமைப்பு பணியில் இருந்த ஊழியர்களில், 1,000 பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, 1,000 பேர் வர உள்ளனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாணவர்களை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் அதிகபட்ச கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து, நமக்கு சாதகமான பதில் வரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.