பட்டாசு, சிறை


உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நேரத்தில், தீபாவளி அன்று, பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க, ரோந்து பணியில் ஈடுபட, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறும்பட்சத்தில், ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

பட்டாசு, சிறைஉத்தரவு :

தீபாவளியன்று, இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என, உச்ச

நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றம், 'தீபாவளியன்று, இரண்டு மணி நேரம் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும். அது எப்போது, எப்படி என்பதை, மாநில அரசே தீர்மானித்து கொள்ளலாம்' என, உத்தரவிட்டது.இதையடுத்து, தமிழகத்தில், தீபாவளி அன்று காலை, 6:00 முதல், 7:00 மணி வரையும், இரவு, 7:00 முதல், 8:00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்தந்த காவல் நிலைய பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.நம்பிக்கை : இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், அனுமதிக்காத நேரத்தில் பட்டாசு வெடிப்பது கண்டறியப்பட்டால்,முதலில், அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். மீறும்பட்சத்தில், இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவில் நடவடிக்கை எடுக்கலாம்.அதாவது, அரசின் உத்தரவுக்கு கீழ்படிந்து நடக்காதது என்ற அடிப்படையில்,

ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம். இவை இரண்டையும் சேர்த்தும் விதிக்கலாம். பெரும்பாலும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தான், பட்டாசு வெடிப்பர். அவர்களுக்கு அறிவுரை வழங்கி, நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படும். ஆனாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே, பொது மக்கள் பட்டாசு வெடிப்பர் என்ற, நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.