வேலுார், ''அடுத்தாண்டு ஜூன் முதல், வேலுாரில் இருந்து, குட்டி விமான சேவை துவங்கப்படும்,'' என, விமான போக்குவரத்து தெற்கு மண்டல நிர்வாக இயக்குனர், ஸ்ரீகுமார் கூறினார்.வேலுார், அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையம், 'உதான்' திட்டத்தில், 90 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
முதல் கட்டமாக, ஓடுதளம் விரிவாக்கம் மற்றும் சிக்னல் கோபுரம், கண்காணிப்பு அறை, ரேடார் மையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, பயணியர் அறை, டிக்கெட் கவுன்டர் என, 25க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்ட, வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கோல்கட்டாவில் இருந்து வந்த விமான நிலைய பொறியாளர் குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். மேலும், விமான போக்குவரத்து தெற்கு மண்டல நிர்வாக இயக்குனர், ஸ்ரீகுமார் தலைமையில், விரிவாக்கப் பணிகள் குறித்து, சில நாட்களாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.இயக்குனர் ஸ்ரீகுமார் கூறியதாவது:விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் செய்யும் பணி, 75 சதவீதம் முடிந்துள்ளது. 7.50 கோடி ரூபாய் மதிப்பில், 2,000 சதுர அடியில், டெர்மினல் கட்டடம் போன்ற பணிகள் அனைத்தும், அடுத்தாண்டு, ஏப்., மாதத்துக்குள் முடிந்து விடும்.ஜூன் முதல், 19 பேர் பயணம் செய்யும் குட்டி விமானம் இயக்கப்படும். 'ட்ரூ ஜெட்' விமான நிறுவனம் மூலம், வேலுாரில் இருந்து, குட்டி விமானங்கள் இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.