பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: இன்று முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று டிச.27-ஆம் தேதி முதல் ஜன.5-ஆம் தேதி வரையிலான நாள்களில் (டிச.30, ஜன.1 தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலமாக தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர் தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலேயே தேர்வெழுத வேண்டும். முறையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும், தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களும் எந்தவித முன்னறிவிப்புமின்றி தானாகவே நிராகரிக்கப்படும். மேலும் இந்தத் தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov என்ற இணையதளத்தில் காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment