உயர் நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஜனவரி 8 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்

உயர் நீதிமன்றத்தில் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் ஜனவரி 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று ஜாக்டோ ஜியோ மாநில  ஒருங்கிணைப்பாளர் மாயவன் நாகர்கோவிலில் தெரிவித்தார்.
ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக நீதிமன்ற நிகழ்வுகள் குறித்த விளக்க கூட்டம், நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில  செயலாளர் ராஜ்குமார், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நாகராஜன், மரிய மிக்கேல், இளங்கோ, முருகன், மணிகண்டன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு, ஜனவரி 7ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள்  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை? தள்ளிப்போட காரணம் என்ன? 12ம் தேதிக்குள் அறிக்ைக சமர்ப்பிக்க வேண்டும் என்று  கூறியுள்ளனர். மேலும் 21 மாத நிலுவை தொகையை தரமுடியாது என்று கூறுவது ஏன்? 21 மாத நிலுவை தொகை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றோம். இவையும் 7ம் தேதி  பரிசீலிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். எங்களது கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வில்லையெனில், ஜனவரி 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.  போராட்டத்துக்கு தள்ளிவிடுவது அரசுதான். ஜாக்டோ ஜியோ போராட்டத்தை விரும்பவில்லை. இந்தநிலை ஏற்பட அரசு எடுத்து வருகின்ற முடிவுகளே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment