பள்ளித்திறக்கும் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள்,சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தல்         புதுக்கோட்டை,டிச28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்காக கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது,  மார்ச்2019-இல் நடைபெறும் பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்விற்கான கால அட்டவணையில் மொழிப்பாடத்திற்கான தேர்வு நேரம் மதியம் 2.00மணி முதல் மாலை 4.45 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.வருகிற 04-01-2019அன்று சமக்ரசிக்‌ஷா ரெமிடியல் டீச்சிங் 9-ஆம் வகுப்பிற்கு நடைபெறும் ஆங்கில பாடத்திற்கான குறைதீர்கற்றல் முன்னறித்தேர்வினை சிறப்பான முறையில் நடைபெறுதற்குரிய ஏற்பாட்டினை செய்யவேண்டும்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பாக வருகிற 08-01-2019அன்று புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் படைப்புகளை பங்கேற்க செய்யவேண்டும். நீட்,ஜே.இ.இ வகுப்புகள் பயிற்சி மையங்களில் திறம்பட நடத்தப்படவேண்டும்.பயிற்சி மைய தலைமையாசிரியர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து கருத்தாளர்களுடன் தொடர்புகொண்டு பயிற்சி செவ்வனே நடைபெறுவதற்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிடவேண்டும். மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள்,குறிப்பேடுகள், சீருடைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பள்ளி திறக்கும் நாளான 02-01-2019 அன்று  பாடவேளையில் மாணவர்களுக்கு வழங்கி கற்றல், கற்பித்தல் பணிகளை தொடங்கவேண்டும்.2018-2019-ஆம் கல்வியாண்டிற்கான கணித உபகரணப்பெட்டி மற்றும் வண்ணக்கிரையான்களுக்கு தரச்சென்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதால் அதனை உரிய முறையில் பெற்று மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.மாணவர் விபரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் (  EMIS-எமிஸ்) போர்க்கால அடிப்படையில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் பதிவுசெய்ய வேண்டும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு வருகிற01-01-2019முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதும்,சேமித்து வைப்பதும்,விநியோகிப்பதும்,போக்குவரத்து செய்வதும்,விற்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.பள்ளித்திறந்த பின் மாணவர்களுடைய வருகைப்பதிவினை ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.பதிவேற்றம் செய்யாததற்கு எந்தவிதமான காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விலையில்லா மிதிவண்டிகள் பெற்ற, வழங்கிய விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். சத்துணவு தொடர்பான மாணவர் வருகை விவரங்கள் தினந்தோறும் குறுந்தகவல் அனுப்பவேண்டும்.குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை தினந்தோறும் ஆய்வு செய்து வருவதால் தலைமையாசிரியர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஒவ்வொரு நாளும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விபரங்களை குறுந்தகவல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.அரையாண்டு விடுமுறை நாட்களில் பத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறவேண்டும்.இவ்வாறாக சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை  தலைமைஆசிரியர்கள் உறுதி செய்து  செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு கலந்துகொண்டு உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்தும், அது குறித்து விழிப்புணர்வு செய்யவேண்டிய அவசியம் பற்றியும் விரிவாகவும்,விளக்கமாகவும் பேசினார். இக்கூட்டத்தில்  மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொறுப்பு)கு. திராவிடச்செல்வம்,இலுப்பூர்(பொறுப்பு)இரா.சிவகுமார், அரசுத்தேர்வுத்துறையின் உதவி இயக்குநர் அ.பிச்சைமுத்து ,அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment