ஆசிரியர் சங்கத்துடன் இன்று பேச்சு

சென்னை: ஊதிய உயர்வு கோரி போராட்டம் அறிவித்துள்ள, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், செங்கோட்டையன், இன்று பேச்சு நடத்துகிறார்.
'ஊதியத்தை உயர்த்தாவிட்டால், போராட்டம் நிச்சயம்' என, ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர், தங்களுக்கு அடிப்படை ஊதியத்தில் முரண்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது, 2009ல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில், ஜூனில் பணி ஆணை பெற்றவர்களுக்கு, அதே ஆண்டு மே மாதம் பணி ஆணை பெற்றவர்களை விட, அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர், ராபர்ட் தலைமையில், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், நேற்று முன்தினம், குடும்பத்தினருடன் சென்னை வந்தனர். அவர்கள், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதற்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.அதேநேரம், சங்க நிர்வாகிகளுடன் பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பேச்சு நடத்தினார். இரவு வரை பேச்சு நடத்தியும், சமரசம் ஏற்படவில்லை. இன்று, அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், பேச்சு நடத்தப்பட உள்ளது. பேச்சு முடியும் வரை, ஆசிரியர்கள் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை, இன்று வெளியிடாவிட்டால், குடும்பத்தினருடன், டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, சங்கத்தின் பொதுச் செயலர், ராபர்ட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment