போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்; மத்திய அரசு அதிகாரி வேதனை

சென்னை : ''தமிழகத்தில், கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன; கடத்தலை கட்டுப்படுத்த, அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு, தென் மண்டல இயக்குனர், புருனோ கூறினார்.


தமிழகத்தில், கஞ்சா, கோகைன், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களின் கடத்தல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, 2018ல், வெளிநாட்டவர் ஆறு பேர் உட்பட, 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மதுரை என, 32 இடங்களில், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு, தென் மண்டல இயக்குனர், புருனோ கூறியதாவது: தமிழகத்தில், கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆந்திராவில் இருந்து, தேனி, திண்டுக்கல்லுக்கு, அதிகளவில் கஞ்சா கடத்தப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த, அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடத்தல் ஆசாமிகளை ரகசியமாக கண்காணித்து, கைது செய்து வருகிறோம்.நைஜீரியர்கள் போன்ற வெளிநாட்டினர், சென்னை, திருச்சி விமான நிலையங்களை, போதை பொருட்களை கடத்தி வருவதற்கான நுழைவாயில்களாக பயன்படுத்தி வருகின்றனர்; அவர்களையும் கைது செய்து வருகிறோம்.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. அதிலிருந்து விடுபட, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி, கல்லுாரிகள் அருகே, ரகசிய கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோருக்கு, கோகைன் போன்ற போதை பொருள், 'சப்ளை' செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரகசிய தகவல் அடிப்படையில், பல்வேறு இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகள், கண்காணிப்பு வளையத்தில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment