வலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் சென்னை சுற்றி மழை கொட்டும்

வலுவாகுது,பெய்ட்டி,புயல் சின்னம்,சென்னை,மழை,கொட்டும்

சென்னை : 'வங்க கடலில் உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வலுவாகுது,பெய்ட்டி,புயல் சின்னம்,சென்னை,மழை,கொட்டும்


புயல் சின்னத்தால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, மிக கனமழை பெய்யும் என, தெரிகிறது.தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கியது. முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, சென்னை முதல், தென் மாவட்டங்கள் வரை, பரவலாக மழையை கொடுத்தது.

பின், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'கஜா' புயலாக மாறி, டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, வட மாவட்டங்களில் மழையை

கொட்டியது. டிச.,6 முதல், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. 

இந்நிலையில், இந்திய பெருங்கடலை யொட்டி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இன்று நள்ளிரவுக்கு பின், புயல் சின்னமான, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மண்டலம், நாளை மறுநாள் புயலாக மாறி, வட மேற்கு திசையில் நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, தாய்லாந்து வழங்கியுள்ள, பெய்ட்டி என்ற பெயர், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புயல், அந்தமானுக்கு மேற்கு பகுதி வழியே சுழன்று, தமிழக கடற்பகுதியை நெருங்க உள்ளது. 


கொட்டும் மழை :


இதனால், தமிழகத்தின் பாம்பன் முதல், ஆந்திராவின் நெல்லுார் வரை, கன மழையை கொடுக்கும். குறிப்பாக, நாகை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் சின்னம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

2 நாட்களுக்கு வறண்ட வானிலை:
வங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்காது என, வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடலை ஒட்டி, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதுவரை, இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் குறிப்பிடும் படியாக மழை இருக்காது; வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களை பொறுத்தவரை, வரும், 13ம் தேதி வரை, வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, தென் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அந்த பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், மோசமான வானிலையும் இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment