ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம், நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.


அப்போது செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்களுக்கு 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.

மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும். யூடியூப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் தலா ரூ20 லட்சம் மதிப்பீட்டில் ஜனவரி 15க்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், இந்தாண்டு நீட் தோ்வுக்கு தமிழகத்தில் இருந்து 26,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றார். அப்போது கொலுசு அணிந்து மாணவிகள் வகுப்பறைகளுக்கு வரக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், ஆனால், மாணவிகள் கொலுசு அணிந்து செல்லும்போது மாணவர்கள் கவனம் சிதறும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் அவர்கள் படிப்பு கெடும் என்றும், தெரிவித்தார். அதேநேரம் மாணவிகள் பூ சூடிக்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்