School Morning Prayer Activities - 10.12.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

திருக்குறள் : 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

உரை:

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

பழமொழி:

Empty vessels make the greatest noise

குறை குடம் கூத்தாடும்

பொன்மொழி:

பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

- பாரதியார்


இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) 100 சதுர மீட்டர் என்பது?
1 ஆர்

2)100 ஆர் சதுர மீட்டர் என்பது?
1 ஹெக்டேர்

நீதிக்கதை :

சிறியதே அழகு

தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”


“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.


“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.

சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.


அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.


“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

இன்றைய செய்தி துளிகள் : 

1.பள்ளி மானிய தொகைகளில் 10% முழு சுகாதார பணிக்கே பயன்படுத்த வேண்டும் - புதிய கட்டுப்பாடுகள்: மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

2.மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு

3.150 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மருத்துவமனை நர்சுகளின் சீருடைகள் மாறுகிறது

4.வருகிறது பேத்தாய் புயல்.. ஆனால் தமிழகத்துக்கு ஆபத்து இருக்காது

5.உலக கோப்பை ஹாக்கி: கால் இறுதியில் இந்தியா

No comments:

Post a Comment