புதுடில்லி:வரும், 2020 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணித பாடத்துக்கு இரண்டு நிலைகளில் தேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துஉள்ளது.

குறைந்த மதிப்பெண்
நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கணித பாடத்தை கடினமாக கருதுவதால், மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், அதில் குறைந்த மதிப் பெண் பெறுகின்றனர்.கடந்த சில ஆண்டுகளில் வெளியான, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கணித பாடத்தில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததுடன், மதிப்பெண்ணும் குறைவாக பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித பாடத்தில் மட்டும், இரண்டு நிலைகளில் தேர்வு நடத்த,சி.பி.எஸ்.இ., முடிவுசெய்தது.இது குறித்து, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக் கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய திட்டத்திலும், தற்போதுள்ள, 10ம் வகுப்பு கணித பாடத்திட்டம் தொடரும். அதன் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் பாடம் நடத்துவர்.
அதேநேரத்தில், புதிய திட்டத்தின்படி,'மேத்தமேடிக்ஸ் ஸ்டாண்டர்டு' என்ற ஒரு தேர்வும், 'மேத்தமேடிக்ஸ் பேசிக்ஸ்' என்ற எளிதான தேர்வும் நடத்தப்படும்.2020ல் அறிமுகம்இதில், 'மேத்தமேடிக்ஸ் ஸ்டாண்டர்டு' தேர்வு, ஏற்கனவே உள்ள தேர்வு. கூடுதலாக, 'மேத்தமேடிக்ஸ் பேசிக்ஸ்' என்ற தேர்வு, இனி அறிமுகப்படுத்தப்படும்.
பிளஸ் 1 வகுப்பில், கணிதத்தை பிரதானபாடமாக தேர்வு செய்வோர், 10ம் வகுப்பில், 'மேத்த மேடிக்ஸ் ஸ்டாண்டர்டு' தேர்வை எழுத வேண்டும். கணிதம் அல்லாத பிற பிரிவில், பிளஸ் 1 படிக்க விரும்பும் மாணவர்கள், 'மேத்தமேடிக்ஸ் பேசிக்ஸ்' என்ற எளிதான தேர்வை எழுதினால் போதும்.இந்த புதிய தேர்வு முறை, 2020, மார்ச்சில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது