'ஜாக்பாட்:,லோக்சபா,தேர்தலில், சமூக வலைதளங்களுக்கு... :ரூ.12 ஆயிரம் கோடி, கிடைக்கும், என, எதிர்பார்ப்பு


புதுடில்லி: மொபைல் போன், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வரும், லோக்சபா தேர்தலின்போது, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய, கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. இதனால், சமூக வலைதள நிறுவனங்களுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விளம்பரம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'ஜாக்பாட்:,லோக்சபா,தேர்தலில், சமூக வலைதளங்களுக்கு... :ரூ.12 ஆயிரம் கோடி, கிடைக்கும், என, எதிர்பார்ப்பு


லோக்சபாவுக்கு, வரும், ஏப்ரல் - மே மாதங் களில் தேர்தல் நடக்க உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நடவடிக்கையாக, இந்த தேர்தல் அமைய உள்ளது.தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் விஷயத்தில், அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. அதேபோல், அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.


விளம்பரம்


கோடிக் கணக்கில் பணம் புரளும், இந்த ஜனநாயக திருவிழாவுக்காக, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' என, பல்வேறு சமூக வலைதளங்களும், இந்த தேர்தல் காலத்தில், அதிக விளம்பரங்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கின்றன.இது குறித்து, சமூக வலைதளங்களுக்கான, விளம்பரத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியதாவது:

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தல், 'டிஜிட்டல்' முறையில் பிரசாரம் செய்ய முடியும் என்பதை உறுதி செய்தது.கட்சிகள்

அனைத்தும், அதி நவீன பிரசார யுக்திகளை கையாண்டன. இடைப்பட்ட, ஐந்து ஆண்டுகளில், சமூக வலைதளங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

கணிப்பு


அதனால், வரும் லோக்சபா தேர்தலில், சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்வது அதிகரிக்கும். எங்கள் கணிப்பின்படி, கடந்த தேர்தலைவிட, வரும் தேர்தலில், சமூக வலை தளங்கள் மூலமான விளம்பரம், 150 மடங்கு அதிகரிக்கும். அதாவது, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, விளம்பரம் செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம்.இதில், பேஸ்புக்கில் மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு விளம்பரங்கள் செய்யப்படும் என, கணிக்கப்படுகிறது.

சமூக வலைதளங்களை அதிகமானோர் பயன்படுத்துவதால், இவற்றில் விளம்பரம் செய்ய, அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, வரும் லோக்சபா தேர்தலில், சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதற்கிடையே, விளம்பரங்களைக் கட்டுப்படுத்த வும், அதை கட்சியின் செலவு கணக்கில் சேர்க்கும் வகையிலும், விளம்பரம் தொடர்பான விபரங்களை பகிர்ந்து கொள்வது குறித்தும், கொள்கைகளை வகுத்து வருவதாக, இணைய தேடுபொறி நிறுவன மான, 'கூகுள்' தெரிவித்து உள்ளது. சமூகவலை தளங்களும், இதுபோன்ற கொள்கை முடிவுகள் எடுக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தது யார்?
'தேசிய கட்சிகளுக்கு, 2017 - 18 நிதியாண்டில் கிடைத்த நன்கொடையில், 53 சதவீதம், அடையாளம் தெரியாதோர் அளித்தவை' என,

ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.பா.ஜ., - காங்., உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கின் அடிப் படையில், அந்தக் கட்சிகளுக்கு கிடைத்துள்ள நன்கொடைகள் குறித்து, ஜனநாயக சீர் திருத்தத்துக்கான சங்கம் என்ற, அரசு சாரா அமைப்பு ஆய்வு செய்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2017 - 18 நிதியாண்டில், பா.ஜ., காங்கிரஸ், இந்திய, கம்யூ., பகுஜன் சமாஜ், திரிணமுல், காங்., தேசியவாத, காங்., ஆகிய தேசிய கட்சிகளுக்கு, 1,293 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்து உள்ளது. இதில், 53 சதவீதம், அதாவது, 689 கோடி ரூபாய் நன்கொடை, அடையாளம் தெரியாதோர் அளித்தவை.மா.கம்யூ., தன் வருமான வரி கணக்கில், நன்கொடைகள் குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை.

மற்ற ஆறு தேசிய கட்சிகளுக்கு, அடையாளம் தெரியாதோர் அளித்த நன்கொடையில், 31 சதவீதம், தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்து உள்ளது.தற்போதைய சட்டங்களின்படி, 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான நன்கொடை அளிப்போர் குறித்த விபரங்களை, கட்சிகள் தெரிவிக்க வேண்டியதில்லை. அதேபோல், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிப்போர் குறித்த விபரங்களையும், அளிக்க வேண்டியதில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.