தனிநபர் வருமான உச்ச வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

2018-2019-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல், தனிநபர் வருமான உச்ச வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 3 கோடி பேர் வரி விலக்கு பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். ஆண்டு வருமானம் 5 லட்சம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை எனவும் கூறினார்.

நாட்டின் நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். இது அடுத்த வருடத்தில் 2.5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

2014-ல் 14-ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தற்போது 21-ஆக உயர்ந்துள்ளதாகவும், ஹரியானாவில் நாட்டின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் கோயல் தெரிவித்தார்.

எல்.இ.டி. விளக்குகள் பயன்பாட்டால் ஆண்டிற்கு 50 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் ஊரக பகுதி பெண்களின் மேம்பாட்டுக்காக உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் 6 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டன. அடுத்த வருடத்திற்கு 8 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.