சென்னை'கடந்த, 100 ஆண்டுகளில், 2018 மிகவும் வெப்பமான ஆண்டு' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில், 2018ம் ஆண்டுக்கான தட்பவெப்ப நிலை குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:இந்தியாவில் நிலவிய வானிலையின் படி, 2018ல், வருடாந்திர சராசரி வெப்பநிலை, இயல்பான அளவை விட, 0.41 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது.அதேபோல், 1901ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, 2018ம் ஆண்டு, ஆறாவது வெப்பம் மிகுந்த ஆண்டாகும்.இதுவரை, 2009, 2010, 2015, 2016 மற்றும் 2017 ஆகிய, ஐந்து ஆண்டுகளும், வெப்பமான ஆண்டாகவே இருந்தன. குளிர் காலம் மற்றும் தென் மேற்கு பருவ மழைக்கு முந்தைய கோடை காலத்தில், இயல்பான அளவில், 0.59 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகரித்திருந்தது.ஆறு புயல்கள், 2018ல் உருவாகியுள்ளன. அவற்றில் மூன்று, அரபி கடலில் உருவாகி, இந்திய பகுதிக்கு மழையை தராமல், வேறு பக்கம் சென்றது. 

அதன்பின் உருவான, தித்லி புயல், ஒடிசாவுக்கும்; கஜா, தமிழகத்துக்கும்; பெய்ட்டி, ஆந்திராவுக்கும் மழையை கொடுத்தன.பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், கன மழை, புயல், கடும் வெப்பம், குளிர் அலைகள், பனி பொழிவு, புழுதி புயல், மோசமான மின்னல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய அனைத்தும், 2018ல் ஏற்பட்டன. இதுபோன்ற இயற்கை சீற்றங்களால், 800 உயிர்கள் பலியாகியுள்ளன.இவற்றில், கேரளாவின் வெள்ளப்பெருக்கில் மட்டும், 223 பேர் பலியாகியுள்ளனர். உத்தர பிரதேசத்தில், 158; மஹாராஷ்டிராவில், 139 பேர் பலியாகியுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.