ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள், தேர்வு நேரத்தில் போராடுவதால், அப்பாவி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் போராட்டத்துக்கு தடை கேட்டு பிளஸ்-1 மாணவர் தொடர்ந்த வழக்கில் ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் ஜன.25-க்குள் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் மாணவர் தரப்பில் வழக்கறிஞர் நவீன் மூர்த்தி ஆஜரானார், அவரது வாதத்தில் பிப்- 1 முதல் செய்முறை தேர்வும், மார்ச்-1 முதல் ப்ளஸ்-2 பொது தேர்வும் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

 அரசுக்கும், ஜாக்டோ ஜியோவுக்கும் இடையிலான இந்த பிரச்னையில் அப்பாவி மாணவர்கள் பாதிக்க கூடாது என்று தெரிவித்தார்.

*ஆசிரியர்களுக்கு மாணவர்களை பற்றி கவலையில்லை, தங்கள் வருமானத்திலேயே அக்கறை காட்டுகின்றனர் என தெரிவித்தார்.*

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் வெற்றி பெற ஆசிரியர்களால் எதுவும் செய்ய முடியவில்லை,  பெற்றோருக்கு அடுத்தபடியாக கூறப்படும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை குழி தோண்டி புதைக்கின்றனர் என வாதிட்டார்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதத்தில், *நேற்று தொடக்க பள்ளி தவிர்த்து பிற அரசு பள்ளிகளில்  39.7 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை* என்றும், பிரச்னைகளுக்கு தீர்வு காண வேறு வழிகள் உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராடுவதாக தெரிவித்தார்.

*மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, இன்று நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்* என்றும், நிலைமையை கையாள அரசு அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு அவர்களின் கோரிக்கையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.

 மேலும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை பற்றியும்  கேட்டனர்.

அதற்கு விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், ஜாக்டோ ஜியோ கோரிக்கையை பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது,

2016-ம் ஆண்டுமுதல் பங்களிப்பு ஓய்வூதிய முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது,

 2017-ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்தது என தெரிவித்தார்.

*பணியில் சேரும்போது தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.56 ஆயிரம்,  நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.60 ஆயிரம், , உயர்நிலை பள்ளி ஆசியர்களுக்கு ரூ.62 ஆயிரம்,  மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.66 ஆயிரம் என ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.*

அப்போது நீதிபதிகள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் எத்தனை பேர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர் என்றும், ஆசிரியர்கள் பணித்திறனை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

 முறையான புள்ளி விவரங்கள் கைவசம் இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

*மேலும், போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து நோட்டீஸ் அனுப்பி பின் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.*

 ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

*அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் நவீன் மூர்த்தி குறுக்கிட்டு, சமுதாயம், பொதுநலன் பாதிக்கப்பட்டால் போராடுபவர்கள் மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், சமுதாய நலன் தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.*

*ஜாக்டோ ஜியோ சங்கங்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், ஒரே இரவில் யாரும் போராட்டத்தில் இறங்கவில்லை என்றும், மதுரை கிளையில் வழக்கு நிலுவை உள்ளபோது இங்கே வழக்கு தொடர முடியாது எனவும் தெரிவித்தார்.*


 2017-ம் ஆண்டுமுதல் கோரிக்கை உள்ளதாகவும், 2009-ம் ஆண்டுமுதல் பணிக்கு சேர்ந்தவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது, பங்களிப்பு ஓய்வூதிய முறையை நீக்க வேண்டும். எங்கள் கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கப்பட்டன என தெரிவித்தார்.

*மதுரையில் தலைமை செயலாளர் ஆஜராகி உத்தரவாதம் அளித்தபோது, போராட்டம் வேண்டாம் என உயர் நீதிமன்றம் கூறியதால் 2017- நவம்பரில் போராட்டத்தை தள்ளி வைத்ததாகவும், ஒரு வருட காலம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் போராட்டத்தை தொடர்ந்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.*

ஜனநாயக உரிமைப்படி பிரச்னைக்கு தீர்வு காண போதுமான காலம் வழங்கியும் அரசு தீர்வு காணவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், அரசு மற்றும் ஊழியர் சங்க பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட முடியுமா? என்பது கேள்விக்குறிதான் என தெரிவித்தார்.

*அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.*

 *அதிகபட்சமாக ஜனவரி 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி-28-க்கு  ஒத்திவைத்ததுடன், வழக்கு குறித்து தமிழக அரசும், ஜாக்டோ ஜியோ அமைப்பும் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.*

நன்றி: தமிழ் இந்து இணையதளம்.