தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான சிறப்பு கணக்கெடுப்பு வரும் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது.  இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் முறைப்படி பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லாத, இடைநின்ற, இடம்பெயரும் தொழிலாளர் குழந்தைகள், சிறப்பு குழந்தைகள் ஆகியோரை கண்டறிவதற்காக மூன்று கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

முதல்கட்டமாக குடியிருப்பு வாரியாக கணக்கெடுப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. அதில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் பள்ளிகளில் அல்லது சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வருகின்றனர்.

இரண்டாவது கட்டமாக அக்டோபர் மாதத்தில் கணக்கெடுப்பு சரிபார்த்தல் பணிகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக நடப்பு ஜனவரி மாதத்தில் சிறப்பு கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிழா, அறுவடை திருநாள் (பொங்கல்) தைப்பூசம் போன்ற விழாக்கள் உள்ளதால் இக்காலங்களில் அதிக அளவு குழந்தைகள் இடம்பெயர்தல் நடைபெறுகிறது.

தொழில் நிமித்தமாக குறிப்பிட்ட பருவ காலங்களில் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்கிறார்களா? என்பதை கண்டறிந்திட சிறப்பு கணக்கெடுப்பு ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஏதேனும் 15 நாட்கள் தேர்வு செய்து நடத்த வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

கூட்டு கணக்கெடுப்பு தேவைப்படும் பகுதியில் தொழிலாளர் நலத்துறை, சைல்டுலைன், சமூக பாதுகாப்பு துறை (மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்) ஆகியோருடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விழாக்கள் நடைபெறும் காலங்களில் கட்டாயமாக பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய அந்தந்த பகுதி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரால் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.