உலக சுகாதார நிறுவனம், 2019ல் உலக மக்களின் உடல் நலத்திற்கு பெரும் சவாலாக இருக்கும், 10 காரணிகளை அறிவித்துள்ளது. அதில், தடுப்பூசி போடுவதில் உள்ள தயக்கமும் இடம் பிடித்துள்ளது.

அலட்சியம், தடுப்பூசிகளை போடுவதில் உள்ள அசவுகரியம், அரசு மருத்துவத் திட்டங்கள் மீதுள்ள அவநம்பிக்கை, தடுப்பூசிகளால் பயனில்லை என்று நினைத்தல், பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று நினைத்தல் போன்ற, பல தவறான கருத்துகளை மக்கள் நம்புவது தான் தடுப்பூசி தயக்கத்திற்கு காரணம் என, சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


மெத்தப் படித்த, பணக்கார நாடான அமெரிக்காவிலேயே கூட, 2015ல் குழந்தைகளுக்கு தடுப்பூசி வேண்டாம் என்ற மருத்துவர்களின் எண்ணிக்கை, அந்நாட்டு மக்கள் தொகையில், 1.5 சதவீதம் பேர். வளரும் நாடுகளில் கேட்கவே தேவையில்லை.


தட்டம்மை முற்றிலுமாக ஒழிக்கப்படவிருந்த நாடுகளில்கூட, தடுப்பூசி தயக்கத்தால், அந்நோய் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது. எனவே, தடுப்பூசி போடும் மருத்துவ சேவகர்களை ஊக்குவிப்பது, அவர்களுக்கு நவீன அறிவியல் ஆய்வு தகவல்களை தருவது போன்றவற்றின் மூலம் இந்த தயக்கத்தை போக்க முடியும் என, உலக சுகாதார நிறுவனம் முடிவெடுத்துள்ளது.