சென்னை : ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தை கைவிட்டு, நேற்று பள்ளிகளில் ஆஜராகினர். அதேநேரத்தில், தற்காலிக ஆசிரியர் நியமன நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு சார்பில், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இதில், அரசு துறை அலுவலக பணிகளில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால், அரசு ஊழியர்களை விட, ஆசிரியர்கள், வேலைநிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தொடக்க பள்ளிகளை பூட்டிவிட்டு, போராட்டத்துக்கு சென்றதால், பெற்றோர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளியை பூட்டியதால், மாணவர்கள், ரோட்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.எனவே, அதிருப்தி அடைந்த மாணவர்களும், பெற்றோரும், பல இடங்களில், ஆசிரியர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். 'ஆண்டு இறுதி தேர்வு நடக்க உள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் கண்டிக்கத்தக்கது' என, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற, சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மனமாற்றம்

இதற்கிடையில், 'ஆசிரியர்கள், ஜன., 25க்குள் பணியில் சேர்ந்து விட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது' என, பள்ளி கல்வி துறை அறிவித்தது. அதையடுத்து, போராட்டத்தில் இருந்து, 25 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.
அதன்பின், 'ஜன., 28க்குள் பணிக்கு திரும்பினால், ஒழுங்கு நடவடிக்கை கிடையாது. இல்லாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கையுடன், வேறு பணியிடத்துக்கு மாற்றப்படுவர்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர் எச்சரித்தனர். இந்த அறிவிப்பு, ஆசிரியர்களிடையே மேலும் பயத்தை ஏற்படுத்தியது.
ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணியிட மாற்றத்தில் இருந்து

தப்பிக்க, பெரும்பாலான ஆசிரியர்கள், போராட்டத்தை கைவிட்டு, நேற்று பணிக்கு திரும்பினர். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 70 சதவீதத்துக்கும் மேல், ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். சில பள்ளிகளில், 90 சதவீதம் பேர், பணிக்கு திரும்பி விட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 லட்சம் பேர் தயார்


இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சியுடன், பி.எட்., முடித்தவர்கள் மற்றும் முதுநிலை பட்ட படிப்பு முடித்தவர்கள் என, 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி பட்டியல், நேற்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்வு

செய்யப்பட்டோரின், மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை, காலியாக அறிவித்து, அவற்றில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யவும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று இறுதி வாய்ப்பு


நேற்று மாலை, 5:00 மணிக்குள், பணியில் சேர முடியாத பலர், நேற்றிரவு, தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு, பணிக்கு வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, இன்னொரு வாய்ப்பு வழங்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், முடிவு செய்துள்ளனர்.
அதையடுத்து, 'இன்று காலை, 9:00 மணிக்குள் பணிக்கு வந்து விட்டால், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் இடமாறுதலில் இருந்து தப்பிக்கலாம்' என, நேற்றிரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவில், 'இன்று காலைக்குள், பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்களை காலி என கருதி, அவற்றில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது.