சென்னை:பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் பெயரில், வேலை வழங்குவதாக ஒரு கும்பல், பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இது போன்ற கும்பலிடம் ஏமாற வேண்டாம் என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.


நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்றி, தங்கள் நிறுவனத்தை நடத்துகின்றன. 

பணி நியமனம்

ஆசிரியர்கள் பணி நியமனம், மாணவர்கள் சேர்க்கை, ஆராய்ச்சி பணிகள் போன்றவற்றிற்கு, யு.ஜி.சி.,யின் மானியமும், உயர் கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கிறது.யு.ஜி.சி.,யின் தென் கிழக்கு மண்டல அலுவலகம், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் செயல்படுகிறது. 

ஆனால், தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில், யு.ஜி.சி.,யின் துணை மண்டல அலுவலகம் என்ற பெயரில், ஒரு கும்பல் போலி அலுவலகம் நடத்தியுள்ளது.இந்த கும்பல், யு.ஜி.சி.,யின் தலைமை அலுவலகம் மற்றும் வட மாநில கல்லுாரிகளின் பெயரை கூறி, போலியாக பணி ஆணை தயாரித்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன. 

இந்தக் கும்பலிடம், வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், யு.ஜி.சி.,யின் டில்லி அலுவலகத்துக்கு புகார்கள் அனுப்பினர். இது தொடர்பாக, புலனாய்வு அமைப்புகள் விசாரணையை துவக்கியுள்ளன.இந்நிலையில், யு.ஜி.சி.,யின் தென் கிழக்கு மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:நாடு முழுவதும், யு.ஜி.சி.,க்கு, ஏழு மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. 

தென் கிழக்கு - ஐதராபாத், மேற்கு மண்டலம் - புனே, மத்திய மண்டலம் - போபால், வட கிழக்கு - கவுகாத்தி, கிழக்கு மண்டலம் - கோல்கட்டா, தென் மேற்கு - பெங்களூரு மற்றும் வடக்கு மண்டல அலுவலகம், காசியாபாதிலும் உள்ளது.போலி அலுவலகம்ஐதராபாதில் உள்ள தென் கிழக்கு மண்டல அலுவலகத்தில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள, கல்லுாரிகளின் நிர்வாகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தென் கிழக்கு மண்டலத்திற்கு, வேறு மண்டல அல்லது துணை மண்டல அலுவலகங்கள் எதுவும் கிடையாது.தமிழகத்தில், மதுரை, சேலம் மற்றும் திருச்சியில், யு.ஜி.சி., தென் மண்டல துணை அலுவலகம் என்ற பெயரில், சில ஏமாற்று பேர்வழிகள், போலி அலுவலகம் நடத்தியுள்ளனர். அவர்கள், போலி அலுவலகங்கள் வழியாக, பலருக்கும் வேலை தருவதாக கூறி, போலி வேலைவாய்ப்பு ஆணைகள் தயாரித்து, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல் வழங்கியுள்ள, பணி ஆணைகள் போலியானது. யு.ஜி.சி.,யை பொறுத்த வரை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வழியாக மட்டுமே, ஆட்கள் தேர்வு செய்யப் படுகின்றனர். எனவே, போலி கும்பலிடம் யாரும் ஏமாற வேண்டாம்.இது குறித்து, 040 - 2320 4735, 2320 0208 என்ற, எண்களில் விளக்கம் பெறலாம். மேலும், ugcsero@gmail.com என்ற, இணைய தளத்தில் புகார்கள் அனுப்பலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.