ஜாக்டோ ஜியோ போராட்டம்: அரசுத் தரப்புக்கு ஆதரவு அளிக்கும் சங்கங்கள்!


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்கவில்லை என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உறுதியளித்துள்ளனர் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மையச் சங்கம்,  தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் ஆகிய அரசின் அங்கீகாரம் பெற்ற பிரதான அரசுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இன்று (21.1.2019) தலைமைச் செயலாளரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

அப்போது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, 22.1.2019 முதல் நடத்த உத்தேசித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தங்கள் சங்கங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும், எவ்வித  போராட்டத்திலும் ஈடுபடாமல் மக்கள் பணியைத் தொடந்ர்து ஆற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரையும் சமீபத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

அத்துடன் அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அச்சங்கத்தினர் அளித்துள்ளார்கள். அக்கோரிக்கைகள் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.