கோவை: ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து கோவையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாணவர்களுக்கு எம்எல்ஏ அர்ஜூனன் பாடம் நடத்தினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3-ஆவது நாளான மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவா கெம்பட்டி காலனியில் அங்கன்வாடி மையத்துக்கு கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அர்ஜூனன் சென்றிருந்தார். அப்போது அங்கு யாரும் ஆசிரியர்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு இவரே பாடம் நடத்தினார்.

இதுபோல் கந்தர்வக்கோட்டையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு கைதான ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களை திருமண மண்டபத்திற்கு வரவழைத்து பாடம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.