புதிய தேர்வு முறையில் மாற்றம் இல்லை : துணை வேந்தர் சுரப்பா திட்டவட்டம்

சென்னை: ''தரமான கல்விக்காக அறிமுகம் செய்யப்பட்ட, 'அரியர்ஸ்' இல்லாத, புதிய தேர்வு முறையை மாற்றும் வாய்ப்பு இல்லை,'' என, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலையின் ஊடக அறிவியல் துறை சார்பில், சர்வதேச ஆவண பட விழா நேற்று துவங்கப்பட்டது. இதற்கான விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா, பொறுப்பு பதிவாளர் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.விழாவிற்கு பின், சுரப்பா அளித்த பேட்டி:அண்ணா பல்கலை, 2017ல், அறிமுகம் செய்துஉள்ள, புதிய பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யால் பரிந்துரைக்கப்பட்டது.அனைத்து வகை கல்லுாரிகளிலும், 'கிரெடிட்' மதிப்பெண் முறை வந்து விட்டது. இது, சர்வதேச கல்வி நிறுவனங்களிலும், தேசிய அளவிலான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்.சி., போன்றவற்றிலும் செயல்பாட்டில் உள்ளது. மேலும், இது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை.இந்த தேர்வு முறை, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான, கிண்டி, இன்ஜி., கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை, எம்.ஐ.டி.,யில் அறிமுகம் செய்யப்பட்டது.அதேபோல, தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளிலும், இந்த தேர்வு முறை அமலில் உள்ளது. அங்கிருந்து எந்த புகாரும் வரவில்லை.சில கல்லுாரிகளில், பேராசிரியர்கள் பற்றாக்குறை, தரமில்லாத பேராசிரியர்கள் போன்றவற்றால், தேர்ச்சி குறைந்துள்ளது. அப்படிப்பட்ட கல்லுாரிகளில் உள்ள மாணவர்கள் வழியாக, புதிய தேர்வு முறை கூடாது என்ற, கோரிக்கை வருகிறது. இதை, ஏற்க முடியாது.வரும் காலங்களில், '30 அல்லது, 40 மதிப்பெண்ணை, கருணை மதிப்பெண்ணாக அளியுங்கள்' என்ற, கோரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது. இது, கல்வித் தரத்தை குறைக்கும் விஷயம்.அண்ணா பல்கலையை பொறுத்தவரை, தரமான இன்ஜினியர்களை உருவாக்கவும், தரமான கல்லுாரிகள், பாடத் திட்டங்களை ஏற்படுத்தவும் பாடுபடும். தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. தரமான கல்வி மற்றும் தேர்வு முறை, வினாத்தாளின் தரம் போன்றவற்றை குறைக்க முடியாது. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை மட்டுமே ஏற்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment