சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.


தமிழக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளனர். அதில் ஒரு கட்டமாக இன்று அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

தற்போது தனியார் நர்சரிப் பள்ளிகளில்தான் எல்கேஜி, யுகேஜி என் ப்ரீகேஜி வகுப்புகள் கூட உள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளையும் மாற்றும் வகையில் கிண்டர்கார்டன் வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

சென்னை எழும்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று இதன் தொடக்க விழா நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வகுப்புகளை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் மொத்தம் 2381 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் படிப்படியாக இது இதர அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, தரமான கல்வியை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கும் வகையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.