தமிழ்நாட்டில் கடந்த 9 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் தங்கள் போராட்டங்களை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளன. முதல்வரின் கோரிக்கை, தேர்வு ஆகியவற்றை மனதில் வைத்து போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய முறையைக் கைவிட வேண்டும், 21 மாத சம்பள உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்களை சரி செய்தல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தது.

ஆனால், துவக்கத்திலிருந்தே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என தமிழக அரசு கூறிவந்தது. முதலமைச்சர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு ஏற்கவில்லை.

ஜாக்டோ ஜியோ குறித்து மக்கள்: `போராட்டம் சரிதான். ஆனால் போராடும் நேரம் தவறு`
முற்றும் ஜாக்டோ - ஜியோ போராட்டம்: காரணம் என்ன?
இந்த நிலையில், 8வது நாளான செவ்வாய்க்கிழமையன்று ஆசிரியர்கள் பணியில் சேராவிட்டால், அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான உயர்நிலை, மேல் நிலை ஆசிரியர்கள் பணியில் இணைந்தனர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிட வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும் கோரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில், பெரும்பாலான ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர். மேல்நிலை, உயர்நிலை ஆசிரியர்களில் 99 சதவீதத்தினரும் இடைநிலை ஆசிரியர்களில் 95 சதவீதத்தினரும் பணிக்குத் திரும்பியதாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் ராமேஸ்வரம் முருகன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதன் சாத்தியம் குறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்சன்ட் பால்ராஜ், "பொதுத் தேர்வுகளும் செய்முறைத் தேர்வுகளும் பிப்ரவரி மாதம் துவங்கவிருக்கின்றன. மாணவர்களின் நலனை மனதில் கொண்டும் பெற்றோரின் கவலைகளைப் புரிந்துகொண்டும் நீதிபதிகள் சொன்ன ஆலோசனைகளை ஏற்றும் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக கைவிடுகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் நீடிக்கின்றன" என்று தெரிவித்தார்.

முதல்வர் தங்களை அழைத்துப் பேசாதது ஏமாற்றமளிப்பாகத் தெரிவித்த நிர்வாகிகள், அதற்குப் பதிலாக போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது, தங்கள் பணியிடங்கள் காலியானதாக அறிவித்தது, இடமாற்றங்களில் ஈடுபட்டது, காவல்துறை கைது நடவடிக்கைகளில் இறங்கியது ஆகியவை தங்களுக்கு பெரும் வருத்தத்தைத் தந்திருப்பதாகவும் கூறினர்.

இதற்கிடையில், ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அந்தப் போராட்டமும் கைவிடப்பட்டது.

ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் இந்தப் போராட்டம், எவ்விதக் கோரிக்கையும் ஏற்கப்படாமல் முடிவுக்கு வந்திருப்பது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தாலும், இந்தப் போராட்டம் பெரும்பாலும் ஆசிரியர்களின் போராட்டமாகவே சித்தரிக்கப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடையிலான ஊதிய வித்தியாசம், இரு பள்ளிகளுக்கு இடையிலான தரம் ஆகியவை சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதத்திற்கும் உள்ளாயின.

"இந்த முறை போராட்டத்தை சரியாக வழிநடத்தவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக போராட்டத்தை நடத்துபவர்கள் தலைமறைவாகிறார்கள் என்றால், அவர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்துவார்கள். ஆனால், இந்த முறை மாவட்ட அளவில் இருந்தவர்கள் கைது நடவடிக்கையைத் தவிர்க்க தலைமறைவானார்கள். நீதிமன்றமும் எங்களுக்கு ஆதரவாக இல்லை. இம்மாதிரியான சூழலில் போராட்டத்தை விலக்கிக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை. எதிர்காலத்திலும் இனி போராட்டங்கள் நடத்தி வெற்றிபெறுவதென்பது இயலாத காரியமென்றே தோன்றுகிறது" என்கிறார் பெயர் தெரிவிக்கவிரும்பாத ஆசிரியர் ஒருவர்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக 2003ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம் வெடித்தது. அப்போது பணிக்கு வராத ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.