எல்.கே.ஜி., வகுப்பில் சேர விடாமல், சங்க நிர்வாகிகள், ஆசிரியர்களை தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுக்கும் நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளிக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும், தொடக்க பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற மழலையர் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, 32 மாதிரி பள்ளிகளில், மழலையர் வகுப்பு துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.இதையடுத்து, தொடக்கப் பள்ளியை ஒட்டியுள்ள அங்கன்வாடிகளில், இந்த வகுப்புகளை துவக்க, பள்ளிக் கல்வி துறையும், சமூக நல துறையும் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, 2,381 பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றில், 53 ஆயிரம் குழந்தைகளை, மழலையர் வகுப்பில் சேர்க்க முடிவானது.இதற்காக, அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும், 2,381 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அங்கன்வாடிகளில், தினமும் இரண்டு மணி நேரம், மழலையர் வகுப்பு நடத்த, பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தினால், பதவி உயர்வு பாதிக்கும் என, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மழலையர் வகுப்பில் பாடம் எடுக்க விரும்பும் ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகள் தடுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த பிரச்னையை, பள்ளிக் கல்வி துறை செயலரின் கவனத்துக்கு, அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். பணி ஒதுக்கீடு பெறும் ஆசிரியர்களை மிரட்டுவோர் மற்றும் தடுப்போர் குறித்து, போலீசில் புகார் அளிக்க, மாவட்ட அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின் கீழ், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது