கடந்த 6 நாட்களாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், போராட்டம் குறையாமல் மேலும் தீவிரமடையவே செய்துள்ளது.

இதன் காரணமாக இன்று பணிக்கு வரவழைக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களும் நாளை வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தை தொடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 90% பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் ஒருபக்கம் போராடி கொண்டிருக்கு, மாணவர்களும் ஒரு பக்கம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து இருப்பது மேலும் போராட்டத்தை வலுப்பெற செய்துள்ளது.
தேர்வுத்துறை ஊழியர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ''நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக'' தெரிவித்துள்ளனர். பிப்.1ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே, தலைமை செயலக ஊழியர்கள், தங்களின் சங்க அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த தலைமை செயலக ஊழியர்களின் போராட்டத்தால் தலைமை செயலக பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக சற்றுமுன் சிறை நிரப்பும் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்து இருப்பது மேலும் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க உள்ளது