சென்னை: ''பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய முரண்பாடு தொடர்பான அறிக்கையை, அரசு பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் கூறியதாவது:லோக் ஆயுக்தா சட்டம், 2018ல் நிறைவேற்றப்பட்டு, நவ., 13 முதல், நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவில், தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க, தேவையான நடவடிக்கைகள் முடிந்து, விரைவில், செயல்பாட்டிற்கு வரும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். குரூப் 1, குரூப் 1 ஏ, குரூப் 1 பி, பணியிட தேர்வுகளுக்கு, தற்போதுள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., பிரிவினருக்கான வயது உச்சவரம்பு, 35ல் இருந்து, 37 ஆகவும், இதரப் பிரிவினருக்கு, தற்போதுள்ள வயது உச்சவரம்பு, 30ல் இருந்து, 32 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, பழைய ஓய்வூதிய திட்டத்தையே, நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், கோரிக்கை விடுத்தன. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தன் அறிக்கையை, நவ., 27ல், அரசிடம் சமர்ப்பித்தது. இதை பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் ஆகியோருக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை, அரசு அமல்படுத்தியது. அதன்பின், ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக, ஒரு நபர் குழுவை, அரசு அமைத்தது. அந்த குழு விசாரணையை முடித்து, அரசுக்கு, 5ம் தேதி அறிக்கை அளித்தது. அதன் மீதும், அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை, எளிமையான முறையில் பராமரிக்கவும், நிதி மற்றும் மனித வள மேலாண்மையை மேம்படுத்திடவும், ஒருங்கிணைந்த திட்டத்தை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், திட்டம் துவக்கி வைக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.